கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அதிக அளவில், அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், மேட்டுப்பாளையம் வனச்சரகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் சில மாதங்களுக்கு முன்பு, பன்றி வேட்டைக்கு வைக்கப்பட்ட அவுட்டுக்காயை சாப்பிட்ட நான்கு பசு மாடுகள் தலை சிதறி உயிரிழந்தன.
இதுதவிர, கடந்த 2014, 2016ஆம் ஆண்டுகளில் தவறுதலாக அவுட்டுக்காயை சாப்பிட்ட குட்டி யானை உட்பட இரண்டு யானைகள் உயிரிழந்தன. அதனைத் தொடர்ந்து, சில யானைகளுக்கும் வாயில் காயம்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்தன.
அந்த யானைகள் அவுட்டுக்காயை சாப்பிட்டதால் காயம் ஏற்பட்டது எனப் பொதுமக்கள் கூறிவந்தனர். எனினும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
![அவுட்டுக்காய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-elephant-special-story-visu-7208104_06062020190331_0606f_1591450411_508.jpg)
கடந்த சில ஆண்டுகளாக அவுட்டுக்காயைப் பயன்படுத்தி பன்றிகளை வேட்டையாடுவது குறைந்து வந்த சூழலில், கடந்த சில மாதங்களாக அதிக அளவில், இதைப் பயன்படுத்தி வன விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, அவ்வப்போது வேட்டை கும்பலைக் கைது செய்த போதிலும், இது ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் அவுட்டுக்காயை வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் அவுட்டுக்காய் வைத்திருந்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஏழு அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்டு கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் வனத்துறையினர் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகளைப் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்துவிடாமல் இருக்கவும்; விவசாயிகள் இந்த வெடியைப் பயன்படுத்துகின்றனர்.
வனப்பகுதிக்கு வெளியே இந்த நாட்டு வெடிகளை வைத்துவிட்டுச் செல்வதால், காட்டுப் பன்றி மட்டுமின்றி மற்ற விலங்குகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனைத் தவறுதலாக யானை எடுத்துச் சாப்பிடும் போது, அதன் வாய்ப் பகுதி வெடியால் சேதமடைவதால், உணவு உட்கொள்ள முடியாமல் யானைகளும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பொதுமக்கள் புரிந்து கொண்டு, நாட்டுவெடி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த நாட்டு வெடி வைப்பதைக் கண்காணிக்க வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் அவுட்டுக்காய் வைத்ததாக இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ஏழு நாட்டு வெடிகள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அவுட்டுக்காய் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறுகையில், "அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகள் வேட்டைக்குப் பயன்படுத்துவது குறித்து தங்களுக்கு முறையாகப் புகார் ஏதும் வரவில்லை. எனினும், இந்த நாட்டு வெடியை அதிகம் பயன்படுத்தும் இடங்கள் எனக் கண்டறியப்பட்ட பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்டப் பகுதிகளில் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டு வெடி வைப்பவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : பிரியங்கா காந்தியைக் கிண்டல் செய்த உ.பி. துணை முதலமைச்சர்!