கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து சில கோரிக்கைகளை அளிக்கக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வந்திருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கோவையில் ஊரடங்கினால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள பல நிறுவனங்கள், நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தனியார் கல்வி நிலையங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைத் தரக் கோரி பெற்றோர்களை நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புலம் பெயரும் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறும் வட மாநில மக்களை அவர்களது நிறுவனங்களில் தங்க வைத்து அவர்களுக்கு முறையான வசதிகளைச் செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். புலம் பெயர முடியாத மக்களுக்கு முறையாக ரேசன் பொருள்களை வழங்கிட வேண்டும். அவர்களுக்கு ஆதார் அடிப்படையில் உதவித் தொகையை வழங்கிட வேண்டும்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் பலர் வீட்டு வாடகை கூட தர முடியாமல் தவித்து வருகின்றனர், அவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயை வழங்கிட வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
கோவையில் முறையாகக் கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனை செய்யாமலேயே கோவை மாவட்டம் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்று மாவட்ட ஆட்சியரும், அமைச்சரும் மார் தட்டிக் கொள்ளக் கூடாது.
எனவே, கோவை மாவட்டத்தில் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு எவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டது முடிவுகள் என்னவென்று வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை - சத்யேந்தர் ஜெயின்