திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவர் குடும்பத்துடன் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் தங்கி விசைத்தறி தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 14) தீபாவளி பண்டிகையை ஒட்டி முத்துக்குட்டி வீட்டில் இருந்தார். அப்போது, அவர் ஏற்கனவே வேலை செய்த விசைத்தறி கூடத்தில் பணியாற்றிய நண்பர் சந்தோஷ் அருகிலுள்ள வனப்பகுதிக்கு மது அருந்த அழைத்து சென்றார். இரவு நேரமாகியும் முத்துக்குட்டி வீடு திரும்பாததால், அதிகாலையில் அருகிலிருந்தவர்கள் தேடி சென்றனர். அப்போது, முத்துக்குட்டி பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், முத்துக்குட்டி, சந்தோஷ் மற்றும் சில நண்பர்கள் மது அருந்த சென்ற நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் முத்துக்குட்டியை கல்லால் தாக்கியும், வேட்டியால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான சந்தோஷை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.