கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இவை இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் உள்ளன. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 40 நாள்களுக்கும் மேலாக விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை, வருமானம் இழந்து தவித்துவந்தனர்.
இதனிடையே ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் விசைத்தறி கூடங்கள் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதேசமயம் விசைத்தறிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மூலப்பொருள்கள் கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதால், சில நாள்கள் மட்டுமே விசைத்தறிகளை இயக்க முடியுமெனவும், தொடர்ந்து விசைத்தறிக்கூடங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், ஊரடங்கு முடியும்வரை விசைத்தறி கூடங்களை இயக்குவதில் சிக்கல் இருப்பதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விசைத்தறிகள் இயங்காததால் வருமானம் இழந்து பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவரும் நிலையில் அரசு மின் கட்டணம் செலுத்த தங்களை நிர்பந்திப்பதாகவும், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.
விசைத்தறி கூடங்களில் பணியாற்றிய வெளி மாவட்டத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். மீதமுள்ள வெளி மாநிலம், வெளிமாவட்டத் தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்வதற்கு ஆயத்தமாக உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களை மட்டுமே வைத்து விசைத்தறிகளை இயக்க வேண்டிய சூழல் உள்ளது. வாகனங்களில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் தொழிலாளர்கள் பணிக்கு வருவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
வேலை தொடர்ந்து கிடைக்குமா, கிடைத்தாலும் ஊதியம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் கல்விக் கட்டணம் செலுத்தவும், சீருடை, நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வாங்கவும் வழி தெரியவில்லை எனவும் அவர்கள் வேதனைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரூரில் விலைபோகாத நாட்டுக் கத்திரிக்காய் - அரூர் ஏரியில் கொட்டிய விவசாயிகள்