கோயம்புத்தூர்: பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு (வயது 69) உடல் நலக்குறைபாடு காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(ஜன.10) காலமானார். கேரள மாநில கோழிக்கோடு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் வினு, சுரேஷ் என்பவருடன் இணைந்து 'சுரேஷ்வினு' என்ற பெயரில் மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளனர்.
இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த கனிச்சுகுளங்கரையில் சிபிஐ, ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, குஷ்ருதி காற்று உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. மலையாள திரைப்படங்களில் பணியாற்றி வந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே வினு, கோவை சிங்காநல்லூர் பகுதிக்குக் குடிபெயர்ந்து சிங்காநல்லூர் பகுதியிலேயே வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் வலி இருந்து வந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வினு இன்று (ஜன.10) காலமானார். அவரது உடல் கோவை சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வினுவின் திடீர் மறைவிற்கு மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வினுவுடன் இணைந்து பணியாற்றிய சுரேஷ், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கக் கோவை வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மலையாள இயக்குநர் சங்கமான "ஃபெஃப்கா" (FEFKA) இயக்குநர் வினுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இயக்குநர் வினுவின் மறைவு கேரள திரைப் பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: நயன்தாரா மீது மும்பையில் வழக்குப்பதிவா? - உண்மை நிலவரம் என்ன?