பொள்ளாச்சியில் தமிழ் இசைச் சங்கத்தின் 48-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி சுப்பு ஆறுமுகத்தின் மகளான பாரதி திருமகள் குழுவினர் கலந்து கொண்டு, பாரதியாரின் பாடல்களை வில்லுப்பாட்டு இசையில் பாடினர். இது பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
கச்சேரி முடிந்த பின்னர் பாரதி திருமகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "அரசியல், அறிவியல், விவசாயம், மருத்துவம் என எந்த ஒரு துறை சார்ந்த செய்தியை சொல்வதற்கும் வில்லுப்பாட்டை விட ஒரு சிறந்த எளிமையான வழி எதுவும் இருக்க முடியாது.
அழிந்து வரும் இந்த கலையை ஊக்குவிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு பாலமாக செயல்பட்டால் வில்லுப்பாட்டை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும். மேலும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்லூரிகளில் வில்லுப்பாட்டு கலையை ஒரு பாடமாகக் கொண்டு வந்தால், மக்கள் மறந்து வரும் இந்த கலையை வளர்த்துவிடலாம்." என அவர் தெரிவித்தார்.