கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்கெட் ரோட்டிலுள்ள பழைய இரும்பு கடையில், வயதான மூதாட்டி சரஸ்வதி என்பவரிடம் கத்தியை காட்டி சுமார் ஒன்றரை பவுன் எடை கொண்ட தாலியை இருவர் பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் வைரம் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பெயரில், பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே ஜி சிவகுமார் தலைமையில் மேற்கு காவல் ஆய்வாளர் வைரம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னகாமணன், கார்த்திக் குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி செய்தவர்களை தேடி வந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று சாட்சிகளிடம் விசாரணை செய்தும், அங்கு அமைந்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது ஜோதிநகர் காலனியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் அரவிந்தன், மாக்கினாம்பட்டி நேரு நகரைச் சேர்ந்த காளியப்பன் மகன் செல்வராஜ் என்றும் தெரியவந்தது.
தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு கொள்ளுபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இருவரையும் கைது செய்து களவு செய்யப்பட்ட நகையை மீட்டனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.