தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த் குமார், மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து சிபிஐ அலுவலர்கள் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக பல தரப்பினரிடமும், பாதிக்கப்பட்ட பெண்கள், உறவினர்களிடமும் ரகசியமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவை ஒட்டியே இந்த வழக்கு நகர்ந்து செல்வதால் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் சிபிஐ அலுவலர்கள் மே 14ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமத்தில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள சபரிராஜனின் வீட்டில், இரண்டு சிபிஐ அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த சபரிராஜனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சிபிஐ அலுவலர்கள் விசாரணையை பொறுத்தவரை எந்தக் கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர் என்பது குறித்து தெரிவிக்காததால் இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.