பொள்ளாச்சி ரயில் நிலையத்தை தினமும் சராசரியாக மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் தினமும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூன்று பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நடைமேடையில் உள்ள கழிப்பிடங்கள் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றன.
சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் நடைமேடை அருகே சிறப்பு கழிப்பிடம் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் விதமாக தெய்வீகமான உடலை கொண்டோர் என பொருள்படும் வகையில் ’திவ்யாங்ஜன்’ என்று எழுதப்பட்ட கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து பூட்டியே கிடக்கிறது என்று மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கழிப்பிட வசதி இல்லாததால் ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள், பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதியடைகின்றனர்.
ரயில் நிலையங்களில பிளாட்பாரம் டிக்கெட் மூலம் வருவாய் ஈட்டும் ரயில்வே நிர்வாகம் கழிப்பிட வசதி கூட முறையாக செய்துத்தரவில்லை என்று பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மலை ரயில் சேவை - ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது