கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஆழியாறு பழைய ஆயக்காட்டு பாசன பகுதிகளில் ஆறாயிரத்து 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, பெரும்பாலான இடங்களிலும் அறுவடை பணிகளும் முடிவடைந்துள்ளன.
அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்துள்ளனர். நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
அரசின் உத்தரவை அடுத்து ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதனை கொள்முதலை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி தொடங்கிவைத்தார்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சன்ன ரகம் குவிண்டாலுக்கு ஆயிரத்து 948 ரூபாயும், மோட்டா ரகம் குவிண்டாலுக்கு ஆயிரத்து 918 ரூபாயும் வழங்கப்படுகிறது.
ஆனால் அருகில் உள்ள மாநிலங்களில் நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கப்படுகிறது. ஆகவே இங்கும் அரசு நெல்லுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.