கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்கு சர்க்கார்பதி, கூமாட்டி, நவமலை உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள், மின்சார பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அப்பர் ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நவமலை செல்லும் தரைமட்ட பாலத்திற்கு மேல் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மலைவாழ் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் வேலையில்லாமல் மலைவாழ் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது அத்தியாவசிய பொருள்கள் வாங்க வாடகை வாகனம் 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுத்து அருகில் உள்ள கோட்டூர் பகுதிக்கு பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
பாலத்தை உயரப்படுத்தினால் மட்டுமே நிரந்தரத தீர்வு எனவும், இதே போல் மழை நீடித்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் எனவும் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.