கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகராட்சியில் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அடுத்து நேற்று (ஜனவரி.4) அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தாணு மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் பேசுகையில், 'பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதிகளுக்கு நகராட்சி அலுவலர்களிடம் கூறுகையில் கண்டுகொள்ளாமல் இருப்பதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பதில் சிரமம் ஏற்படும். பாதாளச் சாக்கடை திட்டத்தில் வீடுகளில் குழாய் பதிக்கும் பணிகளில் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள சுடுகாடு தூய்மைப்படுத்தப்படாமல் இறந்தவர்களின் உடல் மீது உடல் வைப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வருவதை முன்னிட்டு வாக்காளர்களின் ஓட்டுகளை அடுத்த வார்டுகளில் சேர்ப்பதால் மக்கள் வாக்களிப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ஓட்டு உள்ளவர்களை அந்தந்த வார்டுகளில் ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என முன்னாள் கவுன்சிலர்கள் நகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தினர்.
இதில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கூறுகையில், ’பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்சார வசதி, தூய்மையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை பிரச்சினைகளைக் குறித்து நகராட்சி அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி அவர்கள் உள்ள வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றார்.
மேலும், நடைபாதை வியாபாரிகள் நலன் கருதி அவர்களைச் சிரமமின்றி வியாபாரம் செய்ய வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.