பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி அருவிக்கு தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் தீபாவளியன்றும், மறுநாள் திங்கள்கிழமையன்றும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இதனால் நீர்வீழ்ச்சியில் மக்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர். மேலும் இந்தப் பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனப்பகுதிக்குள் மது அருந்தக் கூடாது என்றும் அத்துமீறினால் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியையொட்டி அதிகமான மக்கள் நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தெலங்கானா நயகரா நீர்வீழ்ச்சியின் அழகான காட்சி!