கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஜோதிநகர் டி காலனியில் வசிக்கின்ற சிபின் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சபரீஸ்வரன் என்ற இளைஞருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழனன்று இரவு சிபின் வீட்டிற்குத் தனது கல்லூரி நண்பர்களுடன் சென்ற சபரீஸ்வரன், அவரது நாய்க்குட்டியை தூக்கி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வியாழனன்று இரவு அதே பகுதியிலுள்ள அனுப் என்ற தனது நண்பனின் இல்லத்திற்கு சிபின் ரம்ஜான் விருந்திற்காகச் சென்றபோது, தனது நாய்க்குட்டியினை பார்த்த சபரீஸ்வரன், மதுபோதையில் தனது கல்லூரி நண்பர்கள் எட்டு பேருடன் சென்று பிரச்னை செய்ததாகச் சொல்லப்படுகிறது.மேலும், சபரீஸ்வரன் தனக்கு நன்கு அறிமுகமுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளியாகக் கருதப்படும் பார் நாகாரஜனை அழைத்துள்ளார்.
அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த பார் நாகராஜன், சபரீஸ்வரன் தரப்பிற்கு ஆதரவாக சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வாகனங்களுக்குச் சேதம் விளைவித்ததாக இருதரப்பினரையும் பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் கைதுசெய்தனர். பின்னர், வெள்ளியன்று இரவு கைது செய்யப்பட்ட 14 பேரையும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
இதில் கைதுசெய்யப்பட்ட பார் நாகராஜன், பொள்ளாச்சி பாலியல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். இந்நிலையில் மற்றொரு அடிதடி வழக்கு, பொதுமக்கள் சொத்திற்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.