தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி ஜனவரி 1ஆம்தேதி முதல் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பார்சலுக்குப் பயன்படுத்தும் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள தட்டுகள், பிளாஸ்டிக் கோப்பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் என பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
வியாபாரிகள், மளிகைக்கடை, ஓட்டல், பேக்கரி வியாபாரிகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டை, தட்டு, வாழை இலை, தாமரை இலை, சணல் பை, பேப்பர், அலுமினியம், சில்வர் தட்டு ஆகியவற்றை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஒருமுறை உபயோகிக்கும் பிளஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து கிணத்துக்கடவு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது காட்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பை, டம்ளர் ஆகியவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு எதிரொலி: சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு விடுதியில் அறை வழங்க கூடாது