கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராம மக்கள் அப்பகுதியிலிருந்து பொள்ளாச்சிவரை பேருந்து இயக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இதனையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஒக்கிலிபாளையம் கிராமத்தில் இருந்து பொள்ளாச்சிவரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் விழாவில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ”கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் 40 ஆண்டு கால கோரிக்கையான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள ஆனைமலையாறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் குறித்து இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கேரள முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டியுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த திட்டம் வெற்றிகரமான முடிவை எட்டும். இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் செழித்து பொருளாதாரம் வளரும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.