கோவை மவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள உஞ்சவேலம்பட்டி, செல்வகணபதி நகரில் சமையல் கூலித் தொழிலாளியான சேகர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் கோட்டூர் பகுதியில் உள்ள உணவு விடுதியில் சமையல் தொழிலாளியாகப் பணி செய்து வருகின்றார். இவரது மனைவி அமுதா செல்லப்பாளையம் பகுதியில் வேலைக்குச் செல்கிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் பெண்ணை சென்னையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டாவது பெண் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். மூன்றாவது பெண் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
அனைவரும் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுள்ள நிலையில், இரண்டாவது மகள் திருமணத்திற்காக அடகு வைத்து மீட்டு எடுத்த 19 சவரன் நகைகளையும், ரூ. 75 ஆயிரம் பணத்தையும் பீரோவில் வைத்துள்ளனர்.
இதனிடையே வீட்டை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் கதவுக் கம்பிகளை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மாலை பணி முடிந்து வீடு திரும்பிய சேகர் வீட்டின் கதவு உடைத்து திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று கரடிகள் - பொதுமக்கள் அச்சம்