கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அர்த்தநாரி பாளையம், பருத்தியூர், ஆண்டியூர் பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி, அங்குள்ள மனிதர்களைத் தாக்கி வரும் காட்டு யானை ஒன்று விவசாயி ஒருவரையும் கொன்றது.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், இறந்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து யானையை பிடிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினரும் வருவாய் துறையினரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காட்டு யானையை பிடிப்பதாக உறுதி அளித்த பின்பு மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் பகுதியிலிருந்து கும்கி யானைகளை அர்த்தநாரி பாளையத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அர்த்தநாரி பாளையத்தில் உள்ள விவசாயி ஒருவர், கடந்த ஒரு மாத காலத்தில்தான் காட்டு யானைப் பிடியிலிருந்து மூன்று முறை தப்பியதாகக் கூறினார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தங்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பில்லை எனவும் தாங்கள் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை காட்டுயானை சேதப்படுத்தி உயிர் பயத்தை ஏற்படுத்துவதாகவும் வனத்துறையினர் விரைந்து காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கூறினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!