நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி கடந்த 26ஆம் தேதி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 50 லட்சம் முதல்கட்டமாக வழங்கப்பட்டது,
இதேபோல் இன்று இரண்டாவது கட்டமாக ரூ. 50 லட்சம் வழங்குவதற்கான பரிந்துரைக் கடிதத்தை துணை ஆட்சியர் வைத்தியநாதனிடம் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதைப் போல் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளிவராமல் இருக்க வேண்டும். ஆனைமலைப் பகுதியில் சிலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் என்ன? ஸ்டாலின் சரமாரி கேள்வி!