கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலிலும் அதன் வழியிலும் துணிக்கடைகள், தேங்காய் பழக்கடைகள், ஃபேன்சி ஸ்டோர்கள், ஹோட்டல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
தற்போது ஊரடங்கு காரணமாக கோயில் மூடப்பட்டுள்ளதால் அங்கிருந்த கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (23/5/20) திடீரென அங்கிருந்த பேன்சி ஸ்டோரில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து மளமளவென அடுத்தடுத்து கடைகளுக்கும் வேகமாக பரவியது.
அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து பொள்ளாச்சியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஏழு கடைகள் முற்றிலுமாக எரிந்ததால் 50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. ஊரடங்கு காரணமாக ஏற்கனவே கடைகள் மூடப்பட்டு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தற்போது கடைகள் தீயில் கருகியதால் அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஆனைமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.