கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது ஆழியார் அணை. ஆழியார் அணை கட்டியபோது வனப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்கள், வெளியேற்றப்பட்டு, நவமலை, ஆழியார் வாய்க்கால் மேடு, புளியங்கண்டி பகுதியில் இடமாற்றப்பட்டனர். தற்போது, இப்பகுதி மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
வருமானத்திற்கு அருகிலுள்ள விளைநிலங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். புளியங்கண்டியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கடந்த 2001ஆம் ஆண்டு வனத்துறையால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்பட்டன. 20 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், தற்போது இவர்கள் வசிக்கும் வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.
இது குறித்து பலமுறை துறைசார்ந்த அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது பெய்துவரும் கனமழையால், வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. இரவு நேரத்தில் வீட்டில் தங்க அச்சப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சார் ஆட்சியர் உத்தரவின் பெயரில் வருவாய்த்துறையினர் வீடுகளை அமைத்து தருவதாகக் கூறினர்.
ஆனால், இதுவரை பழுதான குடியிருப்பில் பணிகள் நடைபெறவில்லை. கொடுத்த வாக்குறுதி மட்டும் உறுதியாக இருக்கிறது. மழை நேரத்தில் இடிந்த வீட்டில் தங்கிய மக்களை வருவாய்த்துறையினர், அரசு தொடக்கப்பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மலைவாழ் மக்கள் கூறியதாவது, "இருபது வருடங்களாக கட்டித் தரப்பட்ட குடியிருப்பில் வசித்து வந்தோம். ஆனால் வீடுகள் மிகவும் சிதலமடைந்து, மேற்கூரைகள் பிளவுபட்டு, இரவு நேரங்களில் உறங்கும்போது மேலே விழுகிறது. குழந்தையுடன் தூங்க மிகவும் அச்சமாக உள்ளது. தங்க இடமில்லாமல் தவிக்கும் எங்களின் நிலை அறிந்து அரசு வீடுகளை புதுப்பித்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் உதவி ஆய்வாளரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி மனு!