பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் நெல், வாழை, தென்னை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன. இதில் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு டிசம்பர் மாதம் அறுவடை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்ற ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்ததன் காரணமாக, ஆழியார் அணையில் நீர்மட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையின்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழியாறு அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று ஆழியாறு அணை மின் உற்பத்தி நிலையம் வழியாகப் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் கால்வாயில் வரும்போது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர். நேற்றிலிருந்து தொடங்கி இன்னும் 106 நாள்களுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர், நாள் ஒன்றுக்கு 940 மில்லியன் கனஅடி வீதம் திறந்து விடப்படும் எனக் கூறப்படுகிறது.
இதன்மூலம் ஆனைமலை பகுதியிலுள்ள 6400 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் குளங்களும் நிரம்பிவருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் முறையாக சாகுபடி செய்து தண்ணீரைச் சிக்கனப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:
1,100 மில்லி தங்கத்தில் புத்தாண்டு கேக் - நகைத்தொழிலாளி சாதனை!