கோவை சரவணம்பட்டி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணியாற்றிவருபவர் சரவணன். இவர், கடந்த 18ஆம் தேதி இரவு விசுவாசபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள அலெக்சாண்டர் என்ற ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டு முன் திறவுகோலுடன் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை, சரவணன் எடுத்து மறைத்துவைத்துள்ளார்.
மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்ற தலைமைக் காவலர் சரவணன், உங்களது இருசக்கர வாகனத்தை நேற்று ஒருவர் திருடிவிட்டு தப்ப முயன்றபோது, தான் பறிமுதல் செய்ததாகக் கூறி அலெக்சாண்டரிடம் வாகனத்தை ஒப்படைத்துள்ளார். இதற்காக அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் தொகையை, சரவணன் கையூட்டாகக் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார்.
இதையறிந்த உளவுத் துறை அலுவலர்கள், குற்றப்பிரிவு உயர் அலுவலர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து, கையூட்டு வாங்கிய தலைமைக் காவலர் சரவணனை பணியிடை நீக்கம்செய்து, காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை பார்க்கவும்: மோடியை பாராட்டி பில்கேட்ஸ் கடிதம்