கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் நேரடியாக நாமக்கல் கோழி பண்ணைகளில் இருந்து டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்த பின், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் தமிழக அரசால் வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி அனுமதி இல்லாமல் தனியார் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அந்த இடத்தினை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசின் சின்னம் பொறித்த சுமார் 2 ஆயிரம் சத்துணவு முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் பால்ராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் "பள்ளிகளுக்கு வழங்க போதிய இடம் இல்லாததால் முட்டைகளை வைப்பதற்காக இந்த இடத்தை வாடகைக்கு எடுத்து வைக்குமாறு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் கூறியதாக தெரிவித்ததாகவும், முட்டைகளை இருப்பு வைக்க அனுமதி கடிதத்தை கேட்டபோது, அனுமதி கடிதம் ஏதும் இல்லை என தெரிவித்ததாகவும் போலீசர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதை அடுத்து போலீசார் அரசின் பொருட்களை தனியார் இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் வைப்பது குற்றம் என்றும் அவ்வாறு வைப்பதால் தொடர்ந்து புகார்கள் வருவதாகவும், எனவே வீட்டின் கதவில் அரசால் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை ஒட்டி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், அனுமதி கடிதம் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தற்போது முட்டைகளை வைக்க உரிய அனுமதி உள்ளதா? என்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாம்பாரில் செத்துக் கிடந்த எலி... ஊட்டி உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி!