கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேவுள்ள ஆழியாறு காவல் துறையினர், கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கடும் காற்று, மழையால் ஆழியாறை அடுத்து மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய சின்னார்பதி வான கிராமத்தில் ஏழு குடிசை வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதமடைந்தன.
தற்போது அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை பாதுகாப்பான இடத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் முழு ஊரடங்கு நேரம் என்பதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உணவு, உடை ஆகியவற்றுக்கு அவர்கள் தவித்து வந்துள்ளனர்.
அவர்களின் நிலைமையறிந்து ஆழியார் காவல் நிலைய காவலர்கள், 35 குடும்பங்களுக்கு பத்து நாள்களுக்குத் தேவையான ஐந்து கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருள்கள் அடங்கிய தொகுப்பு, வேட்டி, சேலை, உறங்குவதற்குத் தேவையான பெட்ஷீட் போன்றவை வழங்கப்பட்டன.
இதில் வால்பாறை துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உதவி ஆய்வாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர், அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருள்களையும் உடைகளையும் வழங்கினர்.
கரோனா முழு ஊரடங்கு நேரத்தில் தங்களது கடினமான பணிகளுக்கு இடையே சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் காவல் துறையினரை இப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.