விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான நில அளவீட்டு பணிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல பகுதிகளில் பவர்கிரிட் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உலகம்பட்டி பகுதியில் பவர்கிரிட் அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்ய வந்தனர்.
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும்போது மக்கள், நிலத்தை அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நில உரிமையாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் சமரச பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தங்களது நிலத்தில் காவல் துறையினர் உதவியுடன் அத்துமீறி பவர்கிரிட் அலுவலர்கள் நுழைந்து அளவீடு செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து, நில அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள், பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நில அளவீடு பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெற்றது.