கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை அதிரடியாகக் கைது செய்து வருகின்றனர்.
அந்தவகையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலும் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா, பான் மசாலா, கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததின் அடிப்படையில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முரளி உத்தரவின் பேரில், ஆனைமலை காவல்நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் (36) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மாணிக்கவாசகம் கஞ்சா வாங்கும் நபர்கள் குறித்துத் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அம்பராம்பாளையம் பேருந்து நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரிடமும் சோதனை மேற்கொண்டதில், அவர்களிடம் இரண்டு கிலோ எடையிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அன்னக்கொடி (42), அவரது மனைவி லட்சுமி (34) என்பதும் தெரிய வந்தது. மேலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த சிறுவன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் (35) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்தது.
கணவன், மனைவி உட்பட மூன்று பேரிடம் சோதனை மேற்கொண்டதில் சுமார் 4 கிலோ 100 கிராம் எடையிலான கஞ்சா பிடிபட்டுள்ளது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும், இந்த கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர் என்பது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் கேப்சூல் மூலம் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!