கோவை மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அதனை குடியுரிமை சட்டம் என்ற பெயரில், மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாளும் இத்தகைய இழிவான அரசியலை செய்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பானது அல்ல. அனைத்து தரப்பினருக்கும் எதிரானது. டெல்லியில் மக்கள் வீதிக்கு வந்து அறவழியில் போராடும் நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும், அதை கலைக்க கொந்தளிப்பான நிலையை உருவாக்கி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிற டெல்லி காவல்துறையானது, டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருகிறது. இதனால் டெல்லி காவல் துறையும் வன்முறையை தூண்டுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள் 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவுப்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விரைந்து தலையிட வேண்டும். அதுமட்டுமின்றி, டெல்லி துணைநிலை ஆளுநரை, குடியரசுத் தலைவர் நேரில் அழைத்து பேச வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர் கன்னையா குமார் மீது தேசவிரோத வழக்கு சுமத்திய டெல்லி அரசை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சிஏஏவை திரும்பப் பெற முடியாது என்று கூறுவது அவர்களின் இறுமாப்பை காட்டுகிறது. இதனை மக்கள் வெல்லுவார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க : திருமணம் செய்துகொள்ள சப் கலெக்டர் கேட்ட 'வித்தியாசமான' வரதட்சணையும்... அதை ஏற்றுக்கொண்ட பெண்ணும்!