கோயம்புத்தூர்: மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களோடு உரையாடியும், பல்வேறு சேவைகள் புரியும் தன்னார்வலர்களைப் பாராட்டியும் பேசி வருகிறார். இந்த நிலையில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான லோகநாதன் குறித்தும், அவரது சேவை பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
சூலூர் பகுதியில் வசித்து வரும் லோகநாதன், கடந்த 22 வருடங்களாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். குறிப்பாக கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து, இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார்.
மேலும், பயன்படுத்தப்பட்ட உடைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றுக் கொண்டு ஏழை, எளிய குழந்தைகளுக்கு அதனை வழங்கும் சேவையையும் தொடர்ந்து செய்து வருகிறார். இதற்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரதமர் தனது சேவை குறித்து பேசியது இத்தனை ஆண்டுகளாக, தான் செய்த சேவைக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!