கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அம்மன்புதூர் வனப்பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உருவாக்கப்பட உள்ளது.
வனவிலங்குகள் அடிபட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ தற்போது வண்டலூர் மற்றும் மைசூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு மட்டுமே கொண்டு சென்று சிகிச்சையளிக்க முடியும். அதனால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் வனவிலங்கு மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதலாவதாக கோவையில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் அம்மன்புதூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 130 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக இப்பணிக்காக 6 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் கோவை மண்டலத்திற்குற்பட்ட பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன உயிரினங்கள் வனத்துறை மூலம் மீட்கப்பட்டு இங்கு அமைய உள்ள மையத்தில் அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், மறுவாழ்வு அளித்து பராமரிக்கப்படும்.
இம்மையத்தில் அதிநவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவை அமைய உள்ளது. இந்நிலையில், இந்த மையத்தின் திட்டப்பணிகள் தொடங்க உள்ள நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வனத்துறை உயர் அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் திட்டப்பணிகளைத்தொடங்குவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதைத்தடுக்க வனத்துறை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'ரயில்கள்ளி' என்ற 'உயிர்வேலி' அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு இடங்களை மோட்டார் படகில் பயணித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "இங்கு அமைய உள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.
மேலும் வேட்டைத்தடுப்பு காவலர் பணியில் 10 ஆண்டுக்கும் மேல் பணியாற்றி வருபவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக்கூறிய அமைச்சர் காலியாக உள்ள வனப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.