கோயம்புத்தூர்: கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திடீரென பில்லூர் அணையில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணையின் முழு கொள்ளளவான 100 அடியில், 97 அடியைக் கடந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நீலகிரி, கேரளா வனப் பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விதை மானியத்தை உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை