மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 18,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, கிச்சகத்தியூர், லிங்காபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தபட்டது.
இதன் விளைவாக மேட்டுப்பாளையம் நகர பகுதியில் ஆற்றை ஒட்டியுள்ள பவானி அம்மன் கோயிலில் தண்ணீர் சூழந்து காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள், தாழ்வான பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு துறையினர் போதிய உபகரணங்களுடன் தயார்நிலையில் அங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.