கரோனா பாதிப்புக் காரணமாக, ஐந்தாவது முறையாக நாடு முழுவதும் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழில்கள், கைத்தொழில் செய்பவர்கள் என பலதரப்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளை மட்டுமே நம்பியுள்ள புகைப்பட வீடியோ கலைஞர்கள், கடந்த மூன்று மாதங்களாக நிகழ்ச்சிகள் நடைபெறாததால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி புகைப்பட வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில், 150க்கும் மேற்பட்ட நலிவடைந்த புகைப்படக் கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கரோனோ பாதிப்பு காரணமாக, தமிழ்நாட்டில் 3 லட்சம் புகைப்பட வீடியோ கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதுகுறித்து புகைப்படக் கலைஞர் காமராஜ் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்களாக எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால், நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறோம்.
எதிர்வரும் காலங்களில், இந்தத் தொழிலை நம்பியுள்ள எங்களின் வாழ்வு, பொலிவு பெறுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. பல்வேறு தொழில்களுக்கு நலவாரியம் அமைத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் முதலமைச்சர் புகைப்படக் கலைஞர்கள் மீதும் கருணை காட்டி, நலிவடைந்த 3 லட்சம் புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: போராட்டம் நடத்தும் சூழலை பாஜக அரசு ஏற்படுத்த வேண்டாம் - திமுக தோழமை கட்சி கூட்டத்தில் எச்சரிக்கை