கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த லோயர் பாரளை பகுதியில் குடியிருந்து வருபவர், மாரிமுத்து (43). இவர் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள பள்ளியின் முன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கூட்டமாக பறந்து வந்த மலைத் தேனீக்கள் அவரை தாக்கியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து ஓடி வந்து சத்துணவு மையத்தில் இருந்த சாக்கை எடுத்து தீயினை பற்ற வைத்து, தேனீக்களை விரட்டி, அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
அதற்குள் முகம் முழுக்க தேனீக்கள் கொட்டியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பள்ளி முன் தேனீக்கள் கூட்டம் இவரை தாக்கியதை அறிந்த ஆசிரியர்கள், பள்ளி ஜன்னல் கதவுகளை அடைத்து குழந்தைகளை காப்பாற்றினர்.
தகவல் அறிந்த வால்பாறை நகரமன்ற தலைவர் சுந்தரவல்லி செல்வம் நேரில் பார்வையிட்டு மாரிமுத்து குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு