கோயம்புத்தூர்: வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு, வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் மீது கடந்த ஜன.9ஆம் தேதி செருப்பு மாலை அணிவித்தும், காவி நிற பொடித்தூவியும் அடையாளம் தெரியாத நபர்கள் அவமதிப்பு செய்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக, திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியனர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், இந்து முன்னணி நிர்வாகிகள் அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இருவரது செயல்களும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததால், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க கோவை காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: "தெளிவான முடிவுகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார்" - பொன் ராதாகிருஷ்ணன்