கோவை அன்னூர் அருகே மயில்கல் என்ற இடத்தில் சாலையோரத்தில் 30 ஆண்டு பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் பால் வடிவதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு சென்று மரத்தை பார்வையிட்டனர். இதில் ஒரு சிலர் மரத்தில் அம்மன் வந்திருப்பதாகக் கூறி வேப்ப மரத்தில் மஞ்சள் துணியைக் கட்டி பூஜைகள் செய்து வழிபட்டனர். அம்மன் வந்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ள ஏராளமானோர் வேப்பமரத்தில் பால் வடிவதை ஆர்வத்துடன் பார்த்து விட்டுச்செல்கின்றனர்.
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், "இயல்பாக வேப்பமரத்தில் உள்ளமாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்ப மரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும்.
இதைத்தான் பால்வடிகிறது என்கின்றனர், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்" எனத் தெரிவித்தனர்.
இதுபற்றி சமூக செயற்பாட்டாளர்களும் முற்போக்குவாதிகளும், இன்னும் சிலர் பிற்போக்குத்தனமாக இருப்பது வேதனையான விஷயமாக இருக்கிறது. மரத்தில் பால் வடிவதன் அறிவியல் குறித்தும் மூடப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மரங்களை வெட்ட முயற்சி: அரசு அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!