கோவை போத்தனூரில் உள்ள கல்குவாரியில் வெடி வைத்து எடுக்கப்படும் கற்கள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கனரக வாகனங்கள் ஆகியவையால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து, அதன் உரிமத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், "ஓராட்டு குப்பைக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆனந்த் என்பவரால் அல்ட்ரா டெக் என்னும் பெயரில் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தக்கோரி பல மனுக்கள் அளித்தோம். அப்போது நிறுத்திவிட்டு தற்போது மீண்டும் வேலையை தொடங்கியுள்ளனர்.
இதனால் கிராமம் முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வைக்கப்படும் வெடிகளாலும் கனரக இயந்திரங்களாலும் பெரும் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் சுமார் 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. எனவே, அரசு இந்த குவாரியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!