கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகள் மட்டுமல்லாது, தனியார் இடங்களில் கரோனா சிகிச்சை மையத்தை அமைத்து அரசு சிகிச்சையளித்துவருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் வீரபாண்டி கிராமம் பகுதியில் இயங்கிவந்த இரண்டு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவமனை மூடப்பட்டதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதென அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் ஜே.எம். முருகவேலு, "கோவை மாவட்டம் வீரபாண்டி மலைவாழ் கிராமப் பகுதியில் ஆனைக்கட்டி செல்லும் வழியில் பெதானி சுகாதார நிலையம் உள்ளது. அதேபோல பெரிய ஜம்பு கண்டி பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த இரண்டு சுகாதார நிலையங்களும் இயங்கி வந்த நிலையில் தொற்று பரவலின் காரணமாக பெதானி சுகாதார நிலையம் சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இதனால், இப்பகுதி மக்கள் அனைவரும் பெரிய ஜம்பு கண்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு மருத்துவர் நேரமானது மிகவும் குறைவாகவே உள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மருத்துவர் பணியில் இருக்கிறார்.
இதன்காரணமாக, மருத்துவமனையை அணுகுவதில் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் மருத்துவர்களை நியமித்து மருத்துவமனை இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் செவிலியர் இங்கு ஒருவர் மட்டுமே உள்ளார். எனவே செவிலியரையும் அதிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா உருவாக்கப்பட்டதா? ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்!