கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு மாவட்ட அலுவலர்களுடன் உரையாடினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. 134 பேரில் 88 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தினமும் 15 அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊடகவியலாளர்களும் இடைவெளியை கடைப்பிடித்து கவனத்துடன் இருக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஊரடங்கு முழுமையாக செயல்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். சமய மாநாட்டிற்கு சென்ற குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமான நிலையில் அவருக்கு இருந்த சர்க்கரை நோயால் உயிரிழந்துள்ளார். அவரது உடலை கோவை கொண்டு வர விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்" என அமைச்சர் கூறினார்.
மேலும், "எச்ஐவி நோயாளிகள் மருந்து வாங்கி வாகனங்களில் வீடு திரும்பும்பொழுது காவல் துறையினரால் அபராதம் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரிக்கப்பட்டு தடையின்றி மாத்திரைகள் வாங்கி செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
இதையும் படிங்க: அனுமதிச் சீட்டு இருந்தும் அனுமதி மறுப்பு - மேய்ச்சலின்றி சாகும் மலை மாடுகள்