கோவையில் தனியார் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”மருத்துவர்கள் அவர்கள் வேலையை மட்டும் செய்யவில்லை. பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்கள். எனது மகன், மருமகள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். நோயாளிகள் மருந்துகளை பற்றி கூகுளில் பார்த்து தெரிந்துகொண்டு மருத்துவர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். இன்றைய மாணவர்கள் நம்மை விட புத்திசாலியாக உள்ளார்கள்.
நான் ஆடியன்ஸ் தெரிந்து பேசுவது வழக்கம்.நான் ஒரு பள்ளியில் பேசும்போது மாணவரிடம் நான் ஸ்டேட் போர்டா, சென்டர் போடா என கேட்டேன். ஆனால் அந்த மாணவர் பிளாக் போர்ட் என நகைச்சுவையாக தெரிவித்தார். நான் ஆசிரியர்களை வணக்கத்திற்குரியவர்களாக நினைக்கிறேன்.
மாணவர்கள் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தி பிரச்சனையை தெரிந்து சரி செய்ய வேண்டும். சரியாக பணியாற்ற மனமும், உடலும் ஒத்துழைக்க வேண்டும். ஆகவே யோகா செய்ய வேண்டும். யோகா செய்தால் அதிக பணி செய்ய முடியும். என்னை பொறுத்தவரை 48 மணி நேரம் பணி செய்வேன். நான் இரண்டு மாநிலத்தை சமாளிக்கிறேன்.
இரண்டு செல்போன்களை வைத்து எப்படி சமாளிக்கிறீர்கள் என்கிறார்கள். நான் 2 மாநிலங்களையே வைத்து சமாளிக்கிறேன்.குழந்தைகள் செயற்கை கோள் விடும் நிகழ்ச்சிக்கு சென்றேன் அங்கு தடுக்கி விழுந்தது செய்தி ஆகி விட்டது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”பணியாளர்கள் தினத்தை சிறு நிறுவனங்களாக இருந்தாலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பணியாளர்கள் தான் நிறுவனங்களின் தூண்களாக இருக்கின்றனர். ஆளுநர்கள் பிரதமரால் பரிசீலிக்கப்பட்டு குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்படுகின்றனர். தமிழ்நாடு மக்கள் திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மக்கள் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக வாக்களித்திருந்தால் இருந்தால் மத்திய அரசு அவர்களை மந்திரிகளாக்கி இருக்கும்.
அதனால் எங்கள் மீது தப்பில்லை தமிழ்நாடு மக்களிடம் எங்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என கேட்கிறோம். எங்களைப் போன்றவர்கள் நிர்வாகத் திறமை உடையவர்கள். உடனே சமூக வலைதளத்தில் உன்னை பற்றி தெரியாதா? ஆயிரம் ஓட்டு வாங்கினீர்களா என்றெல்லாம் எழுதத் தொடங்கி விடுகிறார்கள்.
ஆளுநர்களை ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். வடமாநில பணியாளர்கள் அதிக அளவில் இங்க வருவதற்கான அதிக வாய்ப்பு யார் கொடுக்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை ஆட்சியரிடம் மண்டியிட்டு மனு அளித்த பொதுமக்கள்!