கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், ராமநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் கோவைக்கு அடிக்கடி வரவேண்டி இருக்கும். தஞ்சாவூரில் இருந்தபோதுகூட என் மனம் கோவையிலேயே இருந்தது.
மக்களுக்காகச் செய்ய வேண்டிய திட்டங்களைப் பட்டியலிட்டுவரும் வேளையில், விரைந்து முடிக்க வேண்டியவை என மக்கள் கூறும் குறைகள் அதிகம் உள்ளன. அதில் உடனடியாகத் தீர்த்துவைக்கக் கூடிய பல்வேறு குறைகளை நாங்கள் பட்டியலிட்டுவருகிறோம்.
தமிழ்நாட்டைச் சீரமைக்க நான் ஒருவன் மட்டும் நினைத்தால் முடியாது. அதற்காக அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஏப்ரல் 6ஆம் தேதியன்று நேர்மைக்கு வாக்களித்து அவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும். எனக்கு கோவை இன்னொரு வீடாக மாறிவிட்டது.
நான் தேர்தல் முடிந்தவுடன் இங்கு இருக்க மாட்டேன் என்று கூறுபவரே மயிலாப்பூரைச் சேர்ந்தவர்தான். என்னைப் பொறுத்தவரை 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' மனத்தில் அன்பு இருந்தாலே அனைத்தும் நம் ஊர்தான். நான் சினிமா நட்சத்திரமாக இருப்பதைவிட ஒவ்வொருவர் வீட்டிலும் சிறு விளக்காக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.