குடியிருப்புக்குள் நுழையும் எந்த விலங்கையும் மனிதன் வன்முறையைக் கையில் எடுத்து விரட்டி அடிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என வன உயிர் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதனை பலர் துச்சமாகவே கடந்து செல்கின்றனர்.
உதாரணமாக குடியிருப்புக்குள் நுழையும் குரங்குகளை விரட்ட பட்டாசு வெடித்து, அதனை மிரள வைப்பது, அதனைத் தாக்கி காயப்படுத்துவது எனப் பலர் இருக்கின்றனர்.
அந்தப் பலரிலிருந்து நவமலை மக்கள் விதிவிலக்காக இருக்கின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி நவமலை. இங்கு மலைவாழ் மக்கள் குடியிருப்பு, மின்வாரிய ஊழியர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இருந்தாலும் குரங்குகளின் அட்டகாசம் நவமலையில் அதிகம்.
குடியிருப்புகள், கடைகளில் புகுந்து உணவு மற்றும் தின்பண்டங்களை குரங்குகள் அள்ளிக்கொண்டு சென்றுவிடுகின்றன. இதனால், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து குரங்குகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்த மக்கள், தற்போது வீடுகள் மற்றும் கடைகளுக்கு வெளியே புலி பொம்மையை வைத்துள்ளனர்.
இந்தப் புலி பொம்மையைப் பார்க்கும் குரங்குகள் தங்களது அட்டகாசத்தை குறைத்துள்ளன. இதன் காரணமாக வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரத்தை கவனிக்கின்றனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஆனந்த் ராஜ் என்ற வியாபாரி, 'இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறேன். இங்கு குரங்கு தொல்லை அதிகம் இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த, என்னென்னவோ வழிகளை கையாண்டோம். ஒன்றும் பயன் தரவில்லை. புலி பொம்மை வைத்த பிறகு குரங்கு தொல்லை இப்போது பெரிதாக இல்லை' என்றார், மகிழ்ச்சியாக.
அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு வியாபாரி, 'புலி பொம்மை வைத்த பிறகு குரங்குகளின் தொல்லை இல்லை. இந்த முறையை இப்போது எல்லோரும் கடைப்பிடிக்கிறார்கள்' என்றார்.
குடியிருப்புகளுக்குள் புகும் விலங்குகளை விரட்டுவதற்கு வன்முறையைக் கையில் எடுப்பவர்கள் மத்தியில் உள்ளே வரும் விலங்கை, அதன் போக்கில் சென்று விரட்டும் நவமலை வாழ் மக்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் மட்டும் இல்லை, நன்றிக்குரியவர்களும் தான்.
இதையும் படிங்க: புலிப்பறழுடன் கெத்தாக நடந்துவரும் பெண் புலி!