கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் அருகே உள்ள ராமாச்சிபாளையம் கிராமத்தில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று (மே 5) அதிகாலை மூன்று பேர் கொண்ட கும்பல் திருடுவதற்காக கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்பொது ஒருவர் மட்டும் கோயில் வாசலில் நிற்க, இருவர் மட்டும் கோயிலுக்குள் சென்று பொருட்களை திருட முயன்றுள்ளனர்.
கோயிலுக்குள் பொருத்தப்பட்டிருந்த பூட்டை உடைக்க முயன்ற போது அபாய மணி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இதனையடுத்து திருடர்கள் மூவரும் திருடிய பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது காவல் நிலைய வளாகம் அருகே அமைந்துள்ள பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து பணம், சிகரெட் திருடப்பட்டது. இந்நிலையில் கோயில்களில் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றனர். காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : ’ஒரு வாரத்திற்குள் பதிலளிங்க...’; முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ்!