கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சித்தநாயக்கன் பாளையத்தில் சமூக நீதி கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் இரவு முழுவதும் நடைபெற்றது. அப்போது, 200க்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இடத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததை அடுத்து போரட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 19 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, புளியகுளம் அருகே உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் கைது செய்யப்பட்ட 19பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 12ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு திடீரென ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.