பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பழைய ஆயகட்டு பாசனத்தில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மழை இல்லாத காரணத்தால் ஆண்டுக்கு ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே செய்து வந்தனர். ஆனால் சென்ற ஆண்டு நல்ல மழை பெய்ததன் காரணமாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மூன்று மாதங்களுக்கு பிறகு மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல் அறுவடை செய்தனர். அறுவடை செய்த நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் நெல் கொள்முதல் செய்யவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்ததால், அதன்படி 23ஆம் தேதியிலிருந்து கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் டிராக்டர் மூலம் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் வளாகத்தில் சுமார் 1,500 டன் நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.
இரண்டு தினங்களாக கொள்முதல் செய்வதற்கான அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக ஆனைமலை பகுதியில் மழை பெய்து வருவதால் வைக்கப்பட்டுள்ள நெல் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நல்ல தரத்தோடு நெல்லைக் கொண்டு வந்து, அது மழையில் நனைந்து தரம் குறைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் நெல்லை கொள்முதல் செய்ய வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொள்முதல் செய்யவில்லையெனில் நெல்லை சாலையில் கொட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் நெல் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.