கரோனா வைரஸ் நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக இருந்த கோவை, கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை முறைகள் ஆகியவற்றால் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக இருந்த கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறுவதற்கான அடையாளம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு வியாபார கடைகள் செயல்படத் தொடங்கின. குறிப்பாக தேநீர் வழங்காத பேக்கரி நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள், செல்போன் மற்றும் கணினி விற்பனை, உதிரிபாகங்கள் விற்பனை நிலையங்கள், பெட்டிக் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தகுந்த இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என மாநகராட்சி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, பெரிய நிறுவனங்கள் இயங்க குறிப்பாக ஜவுளி கடைகள் திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதை மீறி கோவை டவுன் ஹால், கிராஸ் கட் பகுதியில் சில பெரிய பெரிய ஜவுளிகள் தங்கள் கடைகளில் பின்புறமாக கள்ளத்தனமாக கடைகளை இயக்கி வந்துள்ளன.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் சுரேஷ் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் 10க்கும் மேற்பட்ட பிரபல ஜவுளி கடைகளுக்கு நேரடியாக சென்று கடைகளை பூட்டி சீல் வைத்தார். மேலும், கடைகளில் வேலை செய்வோர், வாடிக்கையாளர்களிடமும் இது போன்று நடந்து கொள்வது முறைதான என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க : டீ கடைகளுக்கு சீல்