கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள 'ஹவுஸிங் யூனிட்' கட்டடங்களை தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1984ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 960 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு தரப்பட்டது.
தற்போது அதன் உறுதித்தன்மை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை இடித்துவிட்டு இங்கு குடியிருப்பவர்களுக்கு, புதியதாக வீடு கட்டித் தருவதற்கு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இங்கு குடியிருப்பவர்கள் சில நாட்களுக்குள் காலி செய்து தந்தால், ஒரு மாதத்திற்குள் இந்த சிதிலமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர அரசு தயாராக உள்ளது.
இங்குள்ள 960 வீடுகளில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டோர் ஒப்புதல் கடிதம் தந்துவிட்டனர். 200 பேர் மட்டும் இன்னமும் ஒப்புதல் கடிதம் கொடுக்கவில்லை. அவர்களும் தந்துவிட்டால் அனைத்து வீடுகளும் இடித்துவிட்டு புதிய வீடு கட்டித்தர அரசு தயாராக உள்ளது.
அரசு யாரையும் பலவந்தமாக வீடுகளை காலி செய்ய கூறவில்லை. அவர்கள் கடிதம் தந்தால் தான் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அரசு கட்டித்தரும். இதனை இங்குள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மழையால் இடிந்த வீடுகள்: அரசு உதவி செய்யுமா?