கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு டி.ராஜா அளித்த பேட்டியில்: "பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநராக நியமிக்கப்படுவதால், ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கருத்துகளைத் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. மாநிலத்துக்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக நாட்டை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சி என்பதை நிராகரிக்க முடியாது. கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதைக் கடந்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து நாட்டைப் பாதுகாக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும். பாஜக ஆட்சியை பிடித்தவுடன் இடதுசாரிகள் வீழ்ந்து வருவதாக கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன்.
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு நேர் எதிராக இடதுசாரிகளின் சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிகட்ட இலக்கு இடதுசாரிகளாகவே இருக்கும். மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவாக உள்ளது.
மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். தேசிய அளவிலான பிரச்னைகள், நாடாளுமன்றம் செயல்படும் விதம் கவலை தரும் வகையில் உள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர பட்ஜெட்டில் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் - சிபி ராதாகிருஷ்ணன்