கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதி முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியது கண்டறியப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்து ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் கண்டறியப்பட்ட நிலையில் காரை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.
ஜமிஷா முபின் 2019ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், தகவல் வந்ததையடுத்து தேசிய பாதுகாப்பு முகமை விசாரணை நடத்தியதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஜமிஷா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர், அங்கிருந்து 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
அதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு இன்று (அக். 23) பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:"திராவிடர்களால் திட்டமிட்டு மதப்பற்று, சாதிப்பற்று ஊட்டப்படுகிறது" - சீமான் காட்டம்!