கோவை: சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி கங்காதேவி. இவர் அழகுக் கலை வல்லுநராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் வழக்கம்போல் அழகு நிலையத்திற்குப் பணிக்கு சென்ற கங்காதேவி, நேற்று முன்தினம் (ஜூலை 6) இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவரது கணவர் சீனிவாசன், அழகு நிலையம் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்கமடைந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்ட சீனிவாசன், வீட்டிற்கு அழைத்துவந்து நடந்தது குறித்து விசாரித்துள்ளார்.
விசாரணையின்போதே தூக்கிட்டுத் தற்கொலை
அப்போது அழகு நிலையத்திற்கு வந்த மூவர், தனது கை, கால், வாயைக் கட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தான் அணிந்திருந்த 19 சவரன் நகைகளைப் பறித்து சென்றதாக கங்காதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, கங்காதேவி தனது வீட்டிற்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நகை கொள்ளைபோனதாக நாடகமாடியது அம்பலம்
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கங்காதேவிக்கும், முத்துப்பாண்டி என்பவருக்கும் இடையே திருமண பந்தத்தை தாண்டிய காதல் இருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் இணைந்தே நகைகள் கொளையடிக்கப்பட்டதாக நாடகமாடியிருக்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்ததால், கணவர் வெளியில் சொல்ல மாட்டார் என கங்காதேவி நினைத்துள்ளார். ஆனால், அதற்கு மாறாக சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து காவல் துறையினர் நடத்திய சிசிடிவி காட்சி ஆய்வுகளால், தான் விரைவில் சிக்கிக் கொள்வோம் என கங்காதேவி அஞ்சியுள்ளார். அதன்பின்னரே அவர் தனது வீட்டிற்குச் சென்று தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஊட்டியில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டியை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 19 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க:இளம்பெண்ணிற்கு மயக்க மருந்து தடவிய முகக்கவசம்: காவல் துறை விசாரணை